×

ஆளை இழுக்க அனாமத்து விழாக்களுக்கெல்லாம் போக வேண்டியிருக்கே என புலம்பும் இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசு மருத்துவமனையில் போன் திருட்டு பற்றி பரவலா புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் சமீப காலமாக திருட்டு கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவ்வளவுக்கும் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புறக்காவல் நிலையமும் உள்ளது. இது மட்டுமல்லாது வார்டுக்கு, வார்டு ஷிப்டு அடிப்படையில் தனியார் செக்யூரிட்டிகளும் மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் வார்டுகளில் திருட்டு கும்பல் புகுந்து நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்களின் செல்போன்களை அபேஸ் செய்து தப்பி விடுகின்றனர். செல்போனை பறிகொடுத்த நோயாளிகள் அவசர தேவைக்கு, பண செலவுக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  உறவினர்கள் உட்பட யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். பதிவு செய்த போன் எண்களும் மாயமான செல்போனில் இருப்பதால் அவர்களின் நிலைமை பரிதாபம். இதில் ஒரு சிலர் மட்டுமே போலீசில் புகார் தருகின்றனர். போலீசிடம் சென்றால் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் என பலர் புகார் தராமலேயே இருந்து விடுகின்றனர். வார்டுக்கு வார்டு சிசிடிவி வசதி உள்ளது. சிசிடிவியை ஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்தினாலே வார்டுகளில் செல்போன் திருட்டுக்கு முடிவு கட்டி விடலாம் என்கின்றனர் நோயாளிகள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வசூலில் கொழிக்கும் விவகாரத்தில் நடவடிக்கை பாயக்கூடும் என்பதால் கிலியில் இருக்கிறாராமே அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் கட்டிடத்தின் தரம், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வுகள் மேற்கொள்ள, இரண்டு எழுத்தை கொண்ட பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பள்ளிகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தி கட்டிடத்தின் உறுதிதன்மையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆய்வுகள் நடத்த  வரும் போது ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கட்டாயமாக கொடுக்க வேண்டுமாம்… இல்லையெனில், பள்ளியின் உறுதித்தன்மை சான்றுகளை கொடுக்க காலதாமதம் செய்வதுடன் பள்ளியின் கட்டிடம் குறித்து சரியான அறிக்கையை  கொடுப்பது இல்லையாம்… இந்த விவகாரம் உயரதிகாரிகள் கவனத்துக்கு  சென்றுள்ளதாம். விரைவில், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை இருக்கும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி கிலியில் உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘பில்டப் ஓவருங்கோ என குமுறுகிறார்களாமே இலை நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியில் கோஷ்டிகளுக்கு பலம் சேர்க்க  சேலத்துக்காரரும், தேனிக்காரரும் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பது ஊரறிஞ்ச விஷயம். இதற்காக தனது ஆதரவாளர்களை குஷிப்படுத்த அவர்கள் முடிந்தவரை எல்லா பங்ஷன்களுக்கும் போறாங்களாம். இப்படி சொந்த ஊரில் சேலத்துக்காரர் பங்கேற்ற பங்ஷன் ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்காம். அவரது கோஷ்டியிலுள்ள ஒன்றிய செயலாளரு ஒருத்தரு, பயங்கர பில்டப் கொடுத்து அவரோட சுயசரிதை புக் ஒண்ணை எழுதியிருக்காராம். அப்படி சுயசரிதை எழுதும் அளவுக்கு அவரு, ஒர்த்தா என்றால் அதற்கான பதில் கொஸ்டீன் தானாம். ஆனால் இந்த பங்ஷனில் பங்கேற்ற சேலத்துக்காரரு, அவரை ஒகோ என்று புகழ்ந்து இவரை பத்தியும் ஏகத்துக்கு பில்டப் கொடுத்தாராம். இதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாஜி மினிஸ்டரு முகத்துல ஈ ஆடலையாம். அதே நேரத்தில் மண்டபத்தில் இருந்த மூத்த  நிர்வாகிகள், தலைவரு காலத்திலிருந்து கட்சியில் இருக்கிற நாம எழுதறதுக்கு நிறைய இருக்கு. இவரெல்லாம் எழுதுவதற்கு அப்படி என்ன இருக்கு? இவருக்கு ஏன் சேலத்துக்காரரு, இவ்வளவு பில்டப் கொடுக்கணும்.. ஆளை இழுக்க இப்படி அனாமத்து விழாவுக்கெல்லாம் தலைவர் போக வேண்டியிருக்கே…’’ என்று புலம்பினார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை ஆட்சி அதிகாரிகளின் லஞ்ச பட்டியல் தயாராயிட்டு இருக்காமே..’’ ‘‘மெடல் மாவட்டத்தின் பட்டாசு நகர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு வீட்டுமனை பட்டா, நில பட்டா, பட்டா பெயர் மாற்றம் பெற தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு சாதாரண மக்கள் எளிதாக பட்டா பெற முடியாத நிலை உள்ளது. யாராக இருந்தாலும், புரோக்கர்களின் மூலம் சென்றால் எளிதாக பட்டா வாங்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த சர்வேயர் பிரிவில் தலைமையிடத்தில் உள்ளவர் மட்டும் மாதம் ரூ.3 லட்சம் வரை வசூல் செய்து விடுவதாகப் புகார் இருக்கிறது.  இங்கு பணம் கொழிப்பதால் தற்காலிக பணியாளர் பணிக்கு கூட கடும் போட்டி இருக்கிறது. லஞ்ச புகார் குறித்து தொடர் புகார் காரணமாக அடிக்கடி ஊழியர்கள் மாற்றப்பட்டாலும் ஏதாவது ஒரு ரூட்டில் பணம் கறந்து விடுகின்றனர். ‘பட்டாசு நகரில்’ தொழில் அதிபர் ஒருவரிடம் சர்வேயர் பிரிவு அதிகாரி கறாராக பணம் கேட்க சம்பந்தப்பட்ட தொழில் அதிபர் தனக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியிடம் கூறி கவலைப்பட்டுள்ளார். உடனடியாக தூங்கா நகரில் இருந்து  வந்த போன் காலால் பட்டாசு நகர் சர்வேயர் செக்சன் பதறி போனது. இங்கு பணிபுரிபவர்களில் சிலர் இலைக்கட்சி விசுவாசிகளாக இருப்பதால், வேறு யார் வந்தாலும் உட்கார கூட சொல்வது கிடையாது. குறிப்பிட்ட அதிகாரிகள் இன்னும் இலைக்கட்சியினரை அழைத்து வந்து தங்கள் இருக்கைக்கு எதிரில் அமரவைத்து, மணிக்கணக்கில் பேசுகின்றனர். இந்நிலையில்,  குறிப்பிட்ட லஞ்ச அதிகாரிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post ஆளை இழுக்க அனாமத்து விழாக்களுக்கெல்லாம் போக வேண்டியிருக்கே என புலம்பும் இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,Anamatu festivals ,Peter Mama ,
× RELATED சேப்பங்கிழங்கு சமோசா